மயிலாடுதுறையில் புனிதமான காவிரியாற்றை மையப்படுத்தி நடைபெறும் புகழ்பெற்ற துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று (7.10.2022) வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறையில் ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரித் துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டுத் தங்கள் பாவங்களைப் போக்கிகொண்டதாகப் புராண வரலாறு கூறுகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவாலயங்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்டக் காவிரியீல் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஐப்பசி மாதம் 1-ம் தேதி துலா உற்சவம் தொடங்கிய நிலையில், கடைசிப் பத்து நாள் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடிமரம் அருகே விநாயகர் அஸ்திர தேவர் எழுந்தருளச் செய்யப்பட்டு, கொடி மரத்திற்கு விசேஷ, அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.
தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்றத்தில் ஆலய தலைமை அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சார்யர், பூஜைகளைச் செய்து வைத்தார். திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய விழாவான திருக்கல்யாணம் 13-ம் தேதியும், திருத்தேரோட்டம் 15-ம் தேதியும், கடைமுக தீர்த்தவாரி 16-ம் தேதியும் நடைபெறுகிறது.
பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சவங்கள் தொடங்கியுள்ள நிலையில் 16-ம் தேதி கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தக் கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.