திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டில் கிரீஷ்மா மற்றும் அவரது மாமாவிடம் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் 9 மணி நேரத்திற்கு மேல் விசாரித்தனர். இதில் முக்கிய தடயங்கள் சிக்கின. இதற்கிடையே கிரீஷ்மா காதலனுடன் ஜாலியாக சுற்றி தங்கிய சுற்றுலா விடுதிகளுக்கும் அழைத்து சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன், கொலை வழக்கில் கைதாகிய கிரீஷ்மா, அவரது தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோர் போலீஸ் காவலில் உள்ளனர். நேற்று கிரீஷ்மாவையும், நிர்மல்குமாரையும் திருவனந்தபுரம் போலீசார் ராமவர்மன்சிறையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 10.30 மணியளவில் தொடங்கிய விசாரணை, இரவு 7 மணி வரை என 9 மணிநேரம் நீடித்தது. சம்பவம் நடந்த அன்று ஷாரோன் வீட்டுக்கு வந்த பிறகு நடந்த முழு சம்பவங்களையும் கிரீஷ்மா நடித்து காட்டினார்.
தொடர்ந்து கஷாயம் தயாரித்த பொடி, கிருமிநாசினி கலக்க பயன்படுத்திய பாத்திரங்கள், பாட்டில், கிருமிநாசினி கலக்கிய போது தரையில் விழுந்ததை துடைத்த துணி ஆகியவை வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. விஷம் கலந்த கஷாயத்தை குடித்தவுடன் ஷாரோன் வீட்டுக்கு வெளியே வாந்தி எடுத்தார். அந்த இடத்தில் உள்ள மண்ணையும் போலீசார் சேகரித்தனர். பின்னர் மதியம் நிர்மல்குமாரையும் போலீசார் வீட்டுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் 2 பேரையும் ஒன்றாக வைத்தும், தனித்தனியாகவும் போலீசார் விசாரித்தனர். நிர்மல்குமாரின் வீடு மேக்கோட்டில் உள்ளது. அங்குதான் அவர் விவசாயத்திற்கு தேவையான கிருமிநாசினியை வாங்கி வைத்திருந்தார். அங்கிருந்து தான் ஒரு பாட்டிலை கிரீஷ்மா எடுத்துள்ளார்.
மேக்கோட்டில் உள்ள வீட்டுக்கும் நிர்மல்குமாரை போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். இதற்கிடையே போலீசார் பூட்டி சீல் வைத்திருந்த கிரீஷ்மாவின் வீட்டை கடந்த 2 தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கிரீஷ்மாவின் தந்தை ஸ்ரீகுமாரை பளுகல் போலீசார் நேற்று வீட்டுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். நேற்று கிரீஷ்மா உள்பட 3 பேரிடமும் சுமார் 9 மணிநேரம் விசாரணை நடந்துள்ளது. அதன் பிறகு கிரீஷ்மா, நிர்மல்குமார் ஆகியோரை திருவனந்தபுரத்துக்கு அழைத்து சென்றனர்.
கிரீஷ்மா ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றதால் அவரை திருவனந்தபுரம் விளப்பில்சாலை போலீஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் போலீசார் தங்க வைத்துள்ளனர். இன்றும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. கிரீஷ்மாவும், ஷாரோனும் திற்பரப்பு உள்பட பல்வேறு இடங்களில் ஒன்றாக வலம் வந்துள்ளனர். திற்பரப்பு, சிற்றாறு அணை பகுதியில் உள்ள விடுதியிலும் தங்கியிருந்தனர்.
அவர்கள் சென்ற அனைத்து இடங்களுக்கும் கிரீஷ்மாவை அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு சென்ற இடங்களில் வைத்து தான் கிரீஷ்மா ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் ஷாரோனுடன் ஒரு போட்டியை நடத்தி உள்ளார். அப்போதே சிறிது சிறிதாக அந்த ஜூசில் கிரீஷ்மா விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதை அவரும் போலீசிடம் ஒப்புக்கொண்டார். விஷம் வேலை செய்கிறதா? என்பதை சோதித்து பார்ப்பதற்காகவே கிரீஷ்மா இவ்வாறு செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.