தமிழக ஆளுநர் விவகாரம் அரசியலமைப்பை யார் மீறினாலும் தண்டனை: பெங்களூருவில் சபாநாயகர் அப்பாவு பேட்டி

பெங்களூரு: சிறந்த சட்டசபை எது என்பதை தேர்ந்தெடுப்பதற்கான விதிகள் வகுக்கும் சபாநாயகர்களின் குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. விதான சவுதாவில் நடந்த இக்கூட்டத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு உள்பட 6 மாநில சபாநாயகர்கள் பங்கேற்றனர். பின்னர் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிறந்த சட்ட பேரவை எது என்பதை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் வரையறுக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணி முடிந்த பிறகு நடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அறிக்கை ஒப்படைக்கப்படும். தமிழக கவர்னர் ரவி, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசியுள்ளதாக பலரும் என்னிடம் தெரிவித்தனர்.

தமிழக சட்ட சபை சபாநாயகர் என்ற முறையில் இதற்கு கருத்து தெரிவிக்கக்கூடாது. அதே நேரம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் தலைமை பதவி கவர்னர். அத்தகைய கவர்னர், இந்திய அரசியல் அமைப்புக்கு எதிராக பேசினால், அது தவறாகும். தமிழகத்தில் இதற்கு முன்பு கவர்னராக சென்னாரெட்டி பதவி வகித்தார். தமிழக சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்தார் என்பதற்காக அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக சட்ட பேரவையில் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நபர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறினால் அது தவறாகும். யார் அதை மீறினாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். தமிழக கவர்னர் ரவிக்கு எதிராக அரசியல் கட்சிகள் எதிர் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில் அவர் டெல்லிக்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு கிடைத்ததா? அல்லது கண்டிப்பு கிடைத்ததா? என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.