இன்று சந்திர கிரகணம்: ரத்த நிலா எங்கெல்லாம் தெரியும்? எத்தனை மணிக்கு பார்க்கலாம்?

சந்திர கிரகணம் இன்று (நவம்பர் 8) நிகழ்கிறது. இதனை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். ஆனால் முழு சந்திர கிரகணத்தை அனைவராலும் பார்க்க முடியாது. குறிப்பாக நாட்டின் கிழக்கு பகுதிகளில் முழு மற்றும் பகுதி வடிவ கிரகண நிலைகளை பார்க்கலாம். இன்றைய தினம் கிரகணம் ஏற்படும் போது நிலா சிவப்பு நிறத்தில் மாறக்கூடும்.

இந்திய நேரப்படி நிலவின் புறநிழல் பகுதியின் தொடக்கம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். இதையடுத்து முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.45 மணிக்கு தொடங்குகிறது. முழுமையான சந்திர கிரகணம் 4.18 மணிக்கு நிகழ்கிறது. இது 5.11 மணிக்கு முடியும். கரு நிழல் பகுதி மாலை 6.19 மணிக்கு விலகும். நிலவின் புறநிழல் பகுதி 7.27 மணிக்கு விலகுகிறது.

சென்னை: மாலை 5.42
பெங்களூரு: மாலை 5.57
ஹைதராபாத்: மாலை 5.43
டெல்லி: மாலை 5.31
மும்பை: மாலை 6.03
கொல்கத்தா: மாலை 4.55
கவுகாத்தி: மாலை 4.37
பாட்னா: மாலை 5.05
ராஞ்சி: மாலை 5.07

சண்டிகர்: மாலை 5.30
லக்னோ: மாலை 5.20
ஸ்ரீநகர்: மாலை 5.31
வாரணாசி: மாலை 5.14
நாக்பூர்: மாலை 5.32
கோஹிமா: மாலை 4.29
அகர்தலா: மாலை 4.43
நொய்டா: மாலை 5.30

இந்த கிரகணம் பசுபிக் பெருங்கடல், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த சந்திர கிரகணம் இந்தியாவில் 2023 அக்டோபர் 28ஆம் தேதி நிகழவுள்ளது. முழு சந்திர கிரகணம் என்பது 2025 மார்ச் மாதத்தில் நிகழும் என நாசா தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணம் எவ்வாறு நிகழ்கிறது?

சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும். அப்போது சூரிய ஒளியால் ஏற்படும் பூமியின் நிழலில் நிலா பயணிக்கும். இது பவுர்ணமி நாளில் மட்டுமே நிகழும். நிலா இருக்கும் இடம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பாதையை பொறுத்து கிரகணம் ஏற்படும் வகையும், நீடிக்கும் கால அளவும் மாறுபடும். சந்திர கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் பூமியின் நிழலை காணலாம்.

முழு சந்திர கிரகணத்தில் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தால் வடிகட்டப்படுகிறது. இதனால் நிலா ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். இதேபோல் பூமியின் வளிமண்டலத்தில் பெரும்பாலான நீல நிற ஒளி வடிகட்டப்பட்டால் நிலா சிவப்பு நிறமாக தெரியும். இதனை ’ரத்த நிலா’ என்று அழைப்பர். அதுவே நிலவின் ஒரு பகுதி மட்டும் பூமியின் நிழலில் நுழைந்தால் அது பகுதி சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.