புதுடெல்லி: இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியின் சவாலா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 2012-ம் ஆண்டு காணாமல் போனார். பின்னர் பல்வேறு துண்டுகளாக வெட்டப்பட்ட அவரது உடல் ஹரியாணாவின் ரோதை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் ரவிகுமார், ராகுல் மற்றும் வினோத் ஆகிய 3 பேர் மீது, கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 3 பேருக்கும் டெல்லி நீதிமன்றம் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி மரண தண்டனை விதித்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றமும் 3 பேருக்கான மரண தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து, தண்டனையை குறைக்கக் கோரி குற்றவாளிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன் அந்த 3 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கூறும்போது, “நீதி கிடைக்கும் என நம்பினோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டு மனம் உடைந்துவிட்டோம்” என்றனர்.