தந்தை மரணத்தால் குடும்ப பாரத்தைச் சுமந்த மாணவி – ஒரே நாளில் வாழ்க்கையை மாற்றிய அமைச்சர்!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியங்கண்ணு கிராமத்தில் மோசமான நிலையில் இருக்கும் கூரைவீட்டில் வறுமையால் மெலிந்துபோன தேகத்தோடு வசிக்கிறது ஒரு நாடோடிக் குடும்பம். இந்தக் குடும்பத்துடைய தலைவன் பாபு குடுகுடுப்பை அடித்து குறிசொல்லி, அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளின் பசியைப் போக்கிவந்தார்.

திடீரென ஒருநாள் அவர் இறந்துவிட மனைவி மல்லிப்பூ குடும்ப பாரத்தை ஏற்றார். உதவிக்குத் தனது 16 வயதாகும் மகன் பழனியை வைத்துக்கொண்டார். கொடிய வறுமையிலும் தனது 14 வயதாகும் மகள் செல்வியைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். 9-ம் வகுப்புப் படித்து வந்த அந்தச் சிறுமி மிகப்பெரிய கனவுகளுடன் புத்தகப் பையை சுமந்துச்சென்றார்.

தாயுடன் செல்வி

இந்த நிலையில், பேரிடியாகச் சமீபத்தில் ஒருநாள் விபத்தில் சிக்கிய மல்லிப்பூவிற்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் போதிய பணமில்லாததால் வீட்டிலேயே அவர் முடங்கிக் கிடக்கிறார். மகனும் சிறிது உடல்நலம் பாதிப்படைந்தவர் என்பதால், குடும்ப வருமானத்துக்கு வழியில்லாமலேயே போனது. இதையடுத்து, செல்வியின் படிப்புக்கு முட்டுக்கட்டை போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. புத்தகப் பையை வீட்டு மூலையில் வைத்துவிட்டு, கடந்த 4 மாதங்களாக தெருத்தெருவாக பிளாஸ்டிக் பொருள்களைத் தலையில் சுமந்து விற்கத் தொடங்கினார். இந்த மாணவியின் துயர நிலை குறித்துத் தெரியவரவே, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் இருவரும் நேற்று காலை அந்த மாணவியின் வீட்டுக்கே சென்றனர்.

அவர்களின் நிலையைப் பார்வையிட்ட பின்னர், கல்லூரி படிப்பு முடியும் வரை அதற்கான செலவுகளைத் தானே ஏற்றுக்கொள்வதாக மாணவிக்கு உத்தரவாதம் கொடுத்து நம்பிக்கையூட்டினார் அமைச்சர் காந்தி. அதுமட்டுமின்றி, மாணவியின் அண்ணன் பழனிக்கு சோளிங்கர் டி.வி.எஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.16,000 சம்பளத்துடன் கூடிய வேலைக்கும் உடனே ஏற்பாடு செய்துகொடுத்தார். மாணவியின் தாய் மல்லிப்பூவிற்கு முதியோர் உதவித்தொகையை இன்றைக்குள் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்தார். மேலும், அவர்கள் தற்சமயம் வசித்துவரும் குடிசை வீட்டை அகற்றிவிட்டு, அரசின் வீடுகள் வழங்கும் திட்டத்தில் புதிய வீட்டைக் கட்டித்தரவும் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டார்.

நேரில் நம்பிக்கையைளித்த அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்

மாணவியிடம் பேசிய அமைச்சர் காந்தி, ‘‘நீ நல்லா படியம்மா. குடும்பப் பிரச்னைகளை நான் சரிப்பண்ணித் தர்றேன். வேற எதாச்சும் வேணும்னா, என்னை நேரடியா வந்து பாருங்க’’ என்று தெரிவித்துவிட்டுச் சென்றார். இதையடுத்து, புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவியை உடனடியாக அழைத்துச்சென்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், வகுப்பறையில் அமரவைத்து புத்தகங்களை வழங்கி நன்றாக படிக்கவும் அறிவுறுத்தினார்.

துயரத்தில் இருந்த ஒரு நாடோடிக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் மாற்றி அமைத்த அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் இருவரையும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.