சென்னை: இன்று சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான், பழனி, திருச்செந்தூர் முருகன் உள்பட பல கோவில்களில் இன்று பிற்பகல் நடை அடைப்பு செய்யப்பட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை (08 நவம்பர் 2022) – முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலாது . ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவினை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காண முடியும்.
இந்தியாவில் சந்திர கிரகணம் இன்று மதியம் 2.39 மணி முதல் மாலை 6.29 மணி வரை என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய நேரப்படி 5 மணி 39 நிமிடங்கள் உதிக்கும். சந்திர கிரகணத்தை 40 நிமிடங்கள் காண முடியும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளது. இந்த நேரங்களில் கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கமானது.
சந்திர கிரகணம் நிகழ உள்ளதன் காரணமாக இன்று 11 மணி நேரம் திருப்பதி பெருமாள் கோயில் நடை அடைக்கப்படும் எனத் தேவஸ்தானம் சார்பாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அன்னதானமும் வழங்கப்பட மாட்டாது எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட உப கோவில்கள் காலை 9.30 மணி முதல் நடை அடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் 22 உப கோவில்களின் நடை சாத்தப்படும் எனக் கோவில் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரவு 7.30 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல வடபழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்பட பிரபலமான கோவில்களிலும் இன்று பிற்பகல் நடை சாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.