அகமதாபாத்: மோர்பி தொங்கு பால விபத்து தொடர்பாக, தாமாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்த குஜராத் உயர்நீதிமன்றம், விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நூறாண்டு பழமையானதொங்கு பாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், பயன்பாட்டுக்கு வந்த 4 நாட்களிலேயே அந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். துருப்பிடித்த, பழைய கேபிள் வயர்கள் மற்றும் அதிக எடை உள்ளிட்டவை விபத்துக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்ட விடுமுறை முடிந்து குஜராத் உயர் நீதிமன்றம் மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. அப்போது, குஜராத் தொங்கு பால விபத்து வழக்கை தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது.
இந்த சம்பவத்தில் நிலைமையின் தீவிரத் தன்மையை கவனத்தில் கொண்டு, விசாரணையை கையிலெடுத்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் பதிலளிக்கும்படி மாநில உள்துறை உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், அடுத்த 7 நாட்களுக்கு பின்னர் (நவம்பர் 14), பால விபத்து சம்பவம் குறித்து அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், குஜராத் தொங்கு பால விபத்தில் மாநில அரசின் கடுமையான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.