தஞ்சை: தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் குறுவை அறுவடை முடிந்து சம்பா தாளடி நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திண்டுக்கல், பழனி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் நெல் நாற்று நடவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆடி பாடி வேலை செய்வதால் அலுப்பு இருக்காது என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளைப் போலவே சேற்று வயலாடி நாற்று நடும் கிராமத்து பெண்கள் பணி சுமை தெரியாமல் இருக்க பாடிக்கொண்டே உற்சாகமாக நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏர் ஓட்டுதல், நீர் பாய்ச்சுதல் மழை, வெயில் போன்ற வேளாண்மை சார்ந்த நிகழ்வுகளும் காதல், வீரம், வறுமை, மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, சரியான கூலி கிடைக்காமை, அத்தை மகனை கிண்டல் செய்தல் போன்றவை பெண்களின் பாடு பொருள் ஆகின்றன. கிராமத்து பெண்கள் தங்களது மகிழ்ச்சியை துக்கம், ஏக்கம், இயலாமைகளை மெட்டுகட்டி பாடுவதும் அதனை சக பெண்கள் தொழிலாளர்கள் சேர்ந்து இசைப்பதும் ஒரு இசை கச்சேரி போன்றே இருக்கிறது.
நெல்நாற்று நடவின் போது மாநிலத்தின் பல பகுதிகளில் நெல்நாற்று முடிக்காணிக்கை என்று ஒரு பழக்கம் உண்டு. பெண் விவசாய தொழிலாளர்கள் தாங்கள் நடவு செய்யும் வயல் வெளிகளின் வரப்புகளில் ஒரு துண்டை விரித்து நாற்றுகட்டு ஒன்றை வைப்பார்கள். அந்த வழியாக போவோர், வருவோர் தங்களால் இயன்ற பணத்தை அதில் காணிக்கையாக போடுவார்கள். இந்த காணிக்கை என்பது நடவின் மீதும் விளைச்சலின் மீதும் மக்கள் கொண்டுள்ள மரியாதையாக பார்க்கப்படுகிறது.
அதே போல இன்னும் சில பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் கூட லாரிகள், இருசக்கர வாகனங்களுக்கு முன்னால் நாற்று முடிகட்டுகளை போட்டுவிடுவார்கள். அதனை கடக்கும் வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்தி காணிக்கை பணம் தருகின்றனர். பணி முடிந்த பின்னர் நடவு கூலியோடு காணிக்கை பணத்தையும் தொழிலாளிகள் பிரித்து கொள்கின்றனர். அதில் ஒரு பங்கு வைத்து அவர்கள் ஊர் கோயில் உண்டியலில் காணிக்கையாக போடுவதும் பல பகுதிகளில் வழக்கமாக உள்ளது.