EWS எனப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அதாவது, சமூக சமத்துவத்திற்கு எதிராக 10 சதவீத EWS இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அனைத்து தரப்பினரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இந்த இடஒதுக்கீடு பயன்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதில் 3 நீதிபதிகள் ஆதரவாகவும், 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு அளித்திருந்தனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர்
, சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று குறிப்பிட்டிருந்தார். பொருளாதார ரீதியாக பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க 2019ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது.
இத்தகைய சூழலில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான நமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
சமூக நீதியை காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணில் இருந்து சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சூழலில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதில், அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்திட உரிய சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக நிர்வாக சட்ட நிபுணர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் கொண்ட சட்ட வல்லுநர் குழு ஒன்றினை அமைத்து அரசு ஆணையிடுகிறது.
சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள்
1 – அமித் ஆனந்த் திவாரி, மாநில அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்,
2 – என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர்
3 – ஏ.அருள்மொழி, வழக்கறிஞர்
4 – வி.லட்சுமி நாரயணன், வழக்கறிஞர்
அரசு அலுவலர்கள்
1 – பா.கார்த்திகேயன், செயலாளர் (சட்ட விவகாரங்கள்)
2 – ச.கோபி ரவிக்குமார், செயலாளர் (சட்டம் இயற்றல்)
பிற வல்லுநர்கள்
1 – முனைவர் சுப.வீரபாண்டியன், தலைவர், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு
2 – செல்வி சி.என்.ஜி.நிறைமதி, வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
சிறப்பு அழைப்பாளர்
1 – டாக்டர் ரவிவர்மா குமார், மூத்த வழக்கறிஞர், பெங்களூரு
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.