மதுரை: தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த பாஜக, முதல் முறையாக நவ.15-ல் ஒன்றிய (மண்டல்) அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதில் அதிக அளவில் கூட்டம் சேர்க்கும் ஒன்றியங்களுக்கு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதுடன், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இது மாவட்ட அளவில் நடைபெற்றது. அடுத்து பால் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதுவரை பொதுவான பிரச்சினைகளுக்கு மாவட்ட அளவிலும், பகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு அந்தந்த பகுதிகளிலும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தது. தற்போது முதல் முறையாக பால் விலை உயர்வைக் கண்டித்து ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மாநில நிர்வாகிகள், அணித் தலைவர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்டப் பார்வையாளர்கள், ஒன்றிய நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை குழு அழைப்பில் (கான்பரென்ஸ் கால்) நேற்று ஆலோசனை வழங்கினார். இது குறித்து பாஜகவினர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 1,104 ஒன்றியங்களிலும் நவ.15-ல் பால் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதை சிறப்பாக நடத்த வேண்டும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆர்ப்பாட்டத்துக்கு எத்தனை பேர் வந்தனர், அவர்கள் புகைப்படத்துடன் தலைமைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டத்துக்கு அதிக அளவில் ஆட்களை திரட்டிய முதல் 5 ஒன்றியங்களுக்கு மாநிலத் தலைவரின் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அளவில் சிறப்பாக செயல்பட்ட ஒன்றிய நிர்வாகிகளுக்கு பிரதமர் அடுத்த முறை தமிழகம் வரும்போது அவரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும் மாநிலத் தலைவர் கூறினார். இவ்வாறு கட்சியினர் தெரிவித்தனர். அண்ணாமலையின் அழைப்பை அடுத்து நவ.15-ல் பால் விலை உயர்வைக் கண்டித்து ஒன்றிய அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.