திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டத்திலேயே சிறந்த பள்ளியாகப் பெயர் பெற்று விளங்கும் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
அதிலும் குறிப்பாக, மாணவர்களுக்கு அலுவலகத்தை நிர்வகித்தல், விற்பனை திறனை மேம்படுத்துதல் மற்றும் ஆதரவற்றோருக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம் மாணவர்களை மேம்படுத்தி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்கள் சார்பாக ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தவருடமும் உணவு விற்பனை திருவிழா நடைபெற்றது.
அந்த விழாவில் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினமும் தங்கள் இல்லத்தில் தயாரித்த உணவு பொருட்களை பள்ளியின் இடைவேளையின் போது மற்ற மாணவ மாணவியருக்கு விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தைச் செலவு போக மீதியுள்ள வருவாயைப் பள்ளி முதல்வரிடம் வழங்கி அதன் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 8ம் வகுப்பு மாணவர்களுக்கான உணவுப் பொருட்கள் விற்பனை விழா நடைபெற்றது. அதில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் இல்லத்தில் தயாரித்த முறுக்கு, சீடை, லட்டு, பூந்தி, வடை, சுண்டல் போன்றவற்றை மற்ற மாணவர்களுக்கு விற்று அதில் உள்ள இலாபத்தைப் பள்ளி முதல்வரிடம் வழங்கினார்கள்.
இதுகுறித்து பள்ளி மாணவர்கள் தெரிவித்ததாவது, “எங்கள் வீட்டில் தயார் செய்த உணவுப் பொருட்களை மற்ற மாணவர்களுக்குக் கொடுத்து அதில் வரும் லாபத்தை ஆதரவற்றோருக்கு வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றுத் தெரிவித்தனர்.
மேலும், இந்த உணவுப் பொருட்கள் விற்பனை திருவிழா குறித்து பள்ளி முதல்வர் திலகம் தெரிவித்ததாவது, “ஒரு சிறந்த மாணவ மாணவியரை உருவாக்குவதில் எங்கள் பள்ளி எப்போதும் முதலிடம் வகிக்கும். அதிலும் குறிப்பாக மாணவர்களுக்குப் பிறருக்கு உதவும் மனப்பான்மை, விற்பனையை மேம்படுத்துதல், பொருளை விற்று அதில் வரும் லாபத்தை எவ்வாறு கணக்கீடு செய்வது அதைப் பிறருக்கு எந்த வழியில் உதவுவது என்பதை கற்றுத் தருகிறோம்.
இந்த விழாவிற்கு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் ஆதரவு அளித்து வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளி மாணவர்கள் தங்கள் வீட்டில் தயாரித்த உணவுப் பொருட்களை சக மாணவர்கள் முதற்கொண்டு ஆசிரியர்கள் வரை அவர்களிடம் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை ஆதரவற்றோருக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி வருவது எங்கள் பள்ளி மாணவர்களின் மனித நேயத்தைக் காட்டுவதாக இருக்கிறது” என்றுத் தெரிவித்தார்.