தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும்
தரப்புக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் பகிரங்கமாக பேட்டியளித்தார்.
மேலும், ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றன. அரசு நிகழ்வுகள், பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திமுக முடிவு செய்துள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ள அறிக்கையில் கையொப்பமிடுமாறு திமுக மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஆளுநர் தேவையில்லை என சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என
தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக ஆளுநர், அவரின் கடமையை செய்து கொண்டு இருக்கிறார். ஆளுநர் தேவையில்லை என சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.
“ஆளுங்கட்சியான திமுகவை எதிர்க்கும் எதிர்க்கட்சியாக அதிமுகவாகிய நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆளுநர் என்ற பதவி குறித்து இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. எனவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு ஆளுநரை பற்றி கருத்துகளை வெளியே பேசுவது தவறான முன்னுதாரணமாக அமையும். ஆளுநர் தனக்குரிய விதிகளின்படிதான் செயல்படுகிறார். அவரை தேவையில்லை என கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை.” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் துணை வேந்தர் பதவிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “பன்வாரிலால் புரோஹித் கூறிய குற்றச்சாட்டில் தவறு இருந்தால் நானாக இருந்தாலும் சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கலாம்.” என்றார்.