‘காதல் கசக்குதய்யா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான துவாரக் ராஜா, தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். தனது முதல் படத்தில் முழுக்க காதல்-மோதல் என காதலர்களுக்குள் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தார். தனது இரண்டாவது படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு க்ரைம் த்ரில்லர் படமான ‘பரோல்’ படத்தை இயக்கியுள்ளார். TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இப்படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, வினோதினி வைத்தியநாதன், கல்பிகா கணேஷ் மற்றும் மோனிஷா முரளி ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திலுள்ள சிறப்பு என்னவென்றால் படக்குழுவினர், தயாரிப்பு, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவருமே புதுமுகங்கள், இந்த புதுமுகங்கள் கூட்டணியில் வெளிவரவிருக்கும் இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைக்க, மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, மிரட்டலான பல ஆக்ஷன் காட்சிகளுடன் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. புதிய குழுவினர் இணைந்து உருவாக்கிய படம் போல் அல்லாமல் நன்கு கற்று தேர்ந்தவர்கள் சேர்ந்து உருவாக்கிய படம் போல் ‘பரோல்’ படம் உருவாகியிருப்பது ட்ரைலரை வைத்து பார்க்கும்போதே தெரிகிறது. கோவலன் மற்றும் கரிகாலன் என்கிற இரண்டு சகோதரர்களின் வாழ்வில் நடக்கும் பரபரப்பான திருப்புமுனைகளை பற்றி தான் இப்படத்தின் கதை சுழல்கிறது. நேற்றைய தினம் நடைபெற்ற ‘பரோல்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பெருமைப்படுத்தினார்.
இந்நிகழ்வினில் பேசிய நடிகர் R S கார்த்திக், இந்த படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையை பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும். அது போலவே இந்த படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்கும் என்று கூறினார். திரு. நாஞ்சில் சம்பத் பேசியதாவது, “மிகவும் நுணுக்கமான கதையை அடையாளம் கண்டு, அதில் திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த கதையில் அம்மாவிற்கும் மகனுக்குமான பாசத்தை அழகான திரைக்கதையாக வடிவமைத்து இருக்கிறார். வித்தியாசமான சிந்தனைகள் கொண்ட ஆட்கள் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள். அந்த வகையில் இந்த படமும், இந்த படக்குழுவும் கண்டிப்பாக வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறினார். மேலும் அவர் சிறை சென்ற போது, பரோல் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களை பற்றி பேசினார். மேலும், பல சுவாரஸ்ய நிகழ்வுகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படம் நவம்பர்-11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோடவுள்ளது.