சேலம், சின்ன திருப்பதி பாண்டியன் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் நசீர் கான். இவருடைய கணவர் ஹபீஸ்கான் பொதுப்பணித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி காலை 11 மணியளவில் இரண்டு பேர் வீடு வாடகைக்கு இருக்கிறதா என வந்து கேட்டிருக்கின்றனர். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என நசீர் கான் கூறியிருக்கிறார். பின்னர் அந்த இரண்டு பேரும் சென்று விட்டனர். மாலை 3 மணிக்கு அதே இரண்டு பேர் மீண்டும் வந்து திடீரென நசீர்கானை கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர்.
இந்த நிலையில், கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி நசீர் கான் கடந்த மூன்று நாள்களாக அதிர்ச்சியிலேயே இருந்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் கொள்ளையர்கள் அவருடைய கை, கால்களை மிதித்து நகைகளை பறித்திருக்கின்றனர். இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து, கன்னங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து உதவி ஆணையர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்து பார்த்தபோது, சின்ன திருப்பதியைச் சேர்ந்த முஸ்தபா, ஜான்சன்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது முன்னதாகவே வழிப்பறி தொடர்பான வழக்குகள் இருக்கிறது. இவர்களுக்கு மூதாட்டி நசீர்கான் தனியாக இருப்பதாக தகவல் கொடுத்தது முஸ்தபாவின் சகோதரி என்று விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், முஸ்தபாவின் சகோதரி தலைமறைவாகிவிட்டதால் போலீஸார் அவரை தேடி வருகின்றனர். அதே நேரத்தில் கைதான இரண்டு பேரையும் போலீஸார் உடனடியாக சிறையில் அடைத்து விட்டனர். அவர்களிடமிருந்து நகைகளை மீட்க முடியவில்லை. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நசீர்கான் நேற்று அதிகாலை உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்குப் பிறகு அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைதான கொள்ளையர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.