சென்னை,
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான கைப்பந்து போட்டி இமாசலபிரதேசத்தில் உள்ள ரோரு நகரில் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், இந்திய விளையாட்டு ஆணையம் உள்பட 7 அணிகள் பங்கேற்றன.
இதன் 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் தமிழ்நாடு-இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 3-0 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு ரூ.3 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. தமிழக அணியை சேர்ந்த சுஜி, ஆனந்தி, நிதிஷா ஆகியோர் சிறந்த வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டனர். கோப்பையை வென்ற தமிழக அணிக்கு, விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.