நவகிரகங்களில் ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானின் வாகனம் காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். காகம் முன்னோர்களுடைய அம்சம் என்பதால் காகத்திற்கு தனி மதிப்பு இருக்கிறது எனலாம். தினம்தோறும் காகங்களுக்கு உணவு வைப்பதால், காகத்தின் வடிவில் இருக்கக்கூடிய முன்னோர்கள் அவற்றை சாப்பிட்டு நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை நெடுங்காலமாக இருந்து வருது. நமது முன்னோர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே காகத்திற்கு தினசரி உணவிடுகிறோம்.
இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள ஊக்கல் பெரும்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் விநாயகர் சன்னதிகள் தனித் தனியாக அமைக்கப்பட்டுவழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலில் சனீஸ்வர பகவானுக்கும் தனியாக சன்னதி அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது. இத்திருக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவானை தரிசிக்க நாள்தோறும் வருகை தரும் சனீஸ்வரன் வாகனமான காக்கை ஒன்று சுவாமி தரிசனம் செய்து விட்டு சன்னதி கோபுரத்தில் அமர்ந்து கா,கா என சத்தம் போட்டு கோவில் அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை நாள்தோறும் அருந்திவிட்டு செல்கிறது.
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் அபிஷேக பாலை அருந்தும் காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் துஷ்ட சக்திகளை விரட்டும் தன்மை கொண்ட இந்த காகத்திற்கு உணவளிப்பது என்பது ஜோதிடத்திலும் முக்கிய பரிகாரமாக கூறப்படுகிறது. காகத்தை ஆகாயத்தோட்டி என்றும் அழைப்பார்கள். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. மேலும் காகம் நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும், இந்த பறவை இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் அதற்கு உணவிடும் பழக்கம் வந்ததாகவும் சொல்வார்கள்.