புதுச்சேரி: குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது. இதனால் தமிழகத்திலிருந்து வந்திருந்த ஏராளமான நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
புதுச்சேரியில் ஜிப்மருக்கு, புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வருவார்கள். இந்த நிலையில் குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு இன்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு மத்திய அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அதன்படி ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது. இதை முறைப்படி ஜிப்மர் நிர்வாகம் அறிவிக்கவில்லை.
இதனால் தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூர், தஞ்சை என பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தனர். ஆனால் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் வாயில் கதவு மூடப்பட்டது. நெடுந்தொலைவில் இருந்து சிகிச்சைக்காக வந்த யாரையும் அனுமதிக்க மறுத்து விட்டதால், நீண்ட நேரம் வாயிலில் நின்றிருந்தனர்.. தொடர் சிகிச்சையில் இருக்கும் பலரும், ஜிப்மரின் இம்முடிவுகளால் கடும் பாதிப்புக்கு உள்ளார்கள்.
வெளியே நின்று கொண்டிருந்த நோயாளிகளை, ஜிப்மர் காவலாளிகள் அங்கிருந்து வெளியேற்றினர். இதில் கர்ப்பிணி பெண்களும் அடங்குவர். ஒருகட்டத்தில் நோயாளிகள் அதிகளவில் வந்ததால் ஒலிபெருக்கி மூலம் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளதாக அறிவித்தப்படி இருந்தனர்.