இலங்கை கிரிக்கெட் வீரர் பாலியல் வழக்கில் சிக்கியது எப்படி? – புதிய தகவல்கள்

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா. இடது கை பேட்ஸ்மேன். இவர் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சார்பில் பங்கேற்க சென்றிருந்தார்.

நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல் ‘அவுட்’ ஆனார். பிறகு காயம் காரணமாக, எஞ்சிய போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே, நேற்று முன்தினம் கற்பழிப்பு வழக்கில் குணதிலகாவை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தநிலையில், இந்த கற்பழிப்பு சம்பவம் பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலியாவின் பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேன் டோஹர்ட்டி கூறியதாக இலங்கையை சேர்ந்த ஒரு பத்திரிகை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குணதிலகாவும், பாதிக்கப்பட்ட 29 வயது பெண்ணும் ஒரு ‘டேட்டிங் ஆப்’ மூலமாக அறிமுகமாகி உள்ளனர். சில வாரங்களாக இருவரும் அதில் உரையாடி வந்தனர்.

கடந்த 2-ந் தேதி இரவு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு பாரில் இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, சிட்னியின் ரோஸ் பே பகுதியில் உள்ள இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்வது என்றும், அங்கு பாலியல் உறவில் ஈடுபடுவது என்றும் இருவரும் ஒருமனதாக முடிவு செய்தனர். அதுபோல், அந்த வீட்டுக்கு சென்றனர்.

அங்கு படுக்கை அறையில் இருவருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. ஆணுறை அணிந்து பாலியல் உறவில் ஈடுபடுமாறு இளம்பெண் வற்புறுத்தினார். ஆனால், அதற்கு குணதிலகா மறுத்தார். இதனால் வாக்குவாதம் எழுந்தது.

ஒருகட்டத்தில், குணதிலகா, இளம்பெண்ணின் கழுத்தை நெரித்தார். பாலியல் பலாத்காரம் செய்தார். அதைத்தொடர்ந்து, இளம்பெண் அளித்த புகாரின்பேரில், குணதிலகா நேற்று முன்தினம் அவர் தங்கி இருந்த ஓட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குணதிலகா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த சில ஆண்டுகளில் அவர் 4 முறை குற்றச்சாட்டுகளில் சிக்கினார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது சக வீரர்களுடன் சேர்ந்து, கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியே சுற்றிய குற்றச்சாட்டில் சிக்கி ஓராண்டு தடை நடவடிக்கைக்கு ஆளானார்.

மற்றொரு சமயம், இலங்கையில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு குணதிலகா சென்றிருந்தார். அங்கு ஒரு பெண்ணிடம் அவர் அத்துமீற முயன்றபோது அவரது கன்னத்தில் அப்பெண் அறைந்து விட்டார்.

2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு நள்ளிரவு விருந்தில் கலந்து கொண்டதால், கிரிக்கெட் பயிற்சியை அவர் தவற விட்டார். அதற்காக அவருக்கு 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

அது நடந்த சில மாதங்களில், கல்லுபிட்டியாவில் ஓட்டல் அறையில் ஒரு நார்வே பெண்ணை அவருடைய நண்பர் கற்பழித்த புகாரில் இவரது பெயரும் அடிபட்டது. இந்த விவகாரத்தில் அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் 6 மாதம் தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து, தற்போதைய கற்பழிப்பு சம்பவம் இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை கிரிக்கெட் உலகத்துக்கு களங்கத்தை உண்டாக்கி உள்ளது.

பொதுவாக, இத்தகைய குற்றச்சாட்டுகளை சந்திக்கும் வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படும். ஆனால், குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து தேர்வு செய்து வந்ததும், வெளிநாடுகளுக்கு அனுப்பியதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.