புதுடெல்லி,
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இமாசல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதற்கான பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர், எல்லை பாதுகாப்பில் காங்கிரஸ் கட்சி சமரசம் செய்து, வளர்ச்சி மற்றும் நல திட்டங்களுக்கு தடைகளை உருவாக்கியுள்ளது என பேசினார்.
இதற்கு பதிலடியாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அல்கா லம்பா கூறும்போது, யோகிஜி முதலில் தனது மாநிலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நொய்டா, காசியாபாத் மற்றும் லக்னோ நகரங்கள் குற்ற உலகின் மைய புள்ளியாக உள்ளன.
உத்தர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பலவீனம் அடைந்து உள்ளது என கூறியுள்ளார்.
இரண்டாவது, பா.ஜ.க. ஆட்சியில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளது என யோகிஜி கூறியது உண்மைக்கு அப்பாற்பட்டது. அப்படியெனில், அவர்களது ஆட்சியின் கீழ் காஷ்மீரில் பண்டிட்டுகள் ஏன் பாதுகாப்பற்று காணப்படுகின்றனர். பட்டப்பகலில் அவர்கள் ஏன் சுட்டு கொல்லப்படுகின்றனர்? என கேள்வி எழுப்பினார்.
இமாசல பிரதேசத்தில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, மகளிர் பாதுகாப்பு, ஆப்பிள் பழ விவசாயிகள், கல்வி, சுகாதாரம், சாலை மற்றும் பல்வேறு விவகாரங்களில் ஒரே பென்சன் திட்டம் உள்பட அரசு தோல்வியடைந்து காணப்படுகிறது.
இந்த விவகாரங்களை பற்றி யோகி பிரசாரத்தில் பேசுவதே இல்லை. ஏனெனில், ஜெய்ராம் தாக்குரின் தோல்வி பற்றி யோகிக்கு நன்றாக தெரியும். அதனாலேயே மக்களின் கவனம் திசைதிரும்ப வேண்டும் என்பதற்காக யோகியை பா.ஜ.க. அனுப்பி வைத்துள்ளது என்று சாடியுள்ளார்.