மதுரை: மதுரையில் இன்று பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மாநகர் பாஜ சார்பில் ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் இந்தி 3வது மொழியாகவே இருக்கிறது. இந்தி மொழியை திணிக்ககூடாது என்பதுதான் பிரதமரின் விருப்பம். காவல்துறையினர் கையில் உள்ள லத்தியை பயன்படுத்தினால்தான் கஞ்சா குடிப்பவர்கள், வழிப்பறி செய்பவர்கள், பெண்களை இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த முடியும்.
பிரதமர் மோடி வரும் 11ம் தேதி மதியம் 1.50 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். மதியம் 2.20 மணிக்கு திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு செல்கிறார். குஜராத் தேர்தலில் கடந்த முறையை விட ஒரு சீட் கூடுதலாக பெற்று பாஜ வெற்றி பெறும். சென்னைக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி வந்துள்ளது. இதனை பயன்படுத்தி திட்டங்களை அரசு செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.