ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலகக்கோப்பைத் தொடர் தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. இந்தியா – இங்கிலாந்து அணியுடனான போட்டி வியாழக்கிழமை அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தப் போது வழக்கமான த்ரோ டவுன்களை எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக பந்து அவரது வலது கையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காயம்பட்ட கையில் ஐஸ் கட்டியை தடவி சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு ரோஹித் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கியிருக்கிறார். அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இங்கிலாந்து எதிரானப் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வியாழக்கிழமை அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ரோகித் ஷர்மா பங்கேற்பார் என்றும் ஒரு வேளை ரோஹித் ஷர்மாவால் பங்கேற்க முடியவில்லை என்றால் தீபக் ஹோடா அல்லது ரிஷப் பண்ட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.