பெங்களூரு: நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த உளவுத்துறை முன்னாள் அதிகாரி ஆர்.என்.குல்கர்னி (83) மீது கார் ஏற்றி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் ஆர்.என்.குல்கர்னி. முன்னாள் உளவுத்துறை அதிகாரியான இவர், ரா அமைப்பிலும் பணியாற்றியவர். 23 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் உளவுத்துறை தொடர்பாக 3 நூல்களை எழுதியுள்ளார். மைசூருவில் தனது மனைவி, மகள் ஆகியோருடன் குல்கர்னி வசித்துவந்தார்.
மைசூரு பல்கலைக்கழகத்தின் மானச கங்கோத்ரி வளாகத்தில் கடந்த 4-ம் தேதி மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரை பின்தொடர்ந்து வந்தகார் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலே குல்கர்னி உயிரிழந்தார். வி.வி.புரம் போக்குவரத்து போலீஸார், குல்கர்னி மீது கார் இடித்துவிட்டு சென்றதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே குல்கர்னியின் குடும்பத்தார் அவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து போலீஸார் மானச கங்கோத்ரி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் நெம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று குல்கர்னி மீது திட்டமிட்டு மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது அவர் மீது காரை ஏற்றிவிட்டு, மீண்டும் பின்னால் வந்து அவர் மீது ஏறிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வி.வி.புரம் போலீஸார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து மைசூரு மாநகர காவல் ஆணையர் சந்திரகுப்தா கூறுகையில், ‘‘முதலில் போலீஸார் இதனை சாதாரண விபத்து வழக்கு என நினைத்து விசாரித்தனர். பின்னர் சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்த போது, திட்டமிட்ட கொலை என தெரிய வந்தது. முதல்கட்ட விசாரணையில் சொத்து தகராறு தொடர்பில் இந்த கொலைநடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
சொத்து தகராறு தொடர்பில் இந்த கொலை நடந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.