புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த கோடைப்பட்டினம் அருகே ஆர்.புதுப்பட்டினத்தைச் சேர்ந்த கணேசன், வடிவேல் ஆகிய இருவரும் கடந்த 4ம் தேதி நாட்டு படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டு நாட்கள் மீன்பிடித்து விட்டு கடந்த 6ம் தேதி கரைக்கு திரும்பியுள்ளனர். அப்பொழுது வளையில் சிக்கியிருந்த மீன், நண்டு போன்றவற்றை எடுத்துவிட்டு வலையை கடலிலேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் காலை கடையில் இருந்த வலையை எடுத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கு வெடிகுண்டு போன்ற பொருள் சிக்கியது. இதனை அடுத்து அவர்கள் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வலையில் சிக்கி இருந்த வெடிகுண்டை கைப்பற்றி சோதனை செய்தனர். அது ஐ.எல்.எல்.ஜி வகை ராக்கெட் வடிவ வெடிகுண்டு என்பதும் சுமார் ஒரு அடி நீளமும் 6 அங்குல விட்டமும் இருப்பது தெரியவந்தது. இந்த வெடிகுண்டு வெடித்து இருந்தால் அப்பகுதியில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெடிகுண்டை கைப்பற்றிய போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர் வளையில் ராக்கெட் வெடிகுண்டு சிக்கியது கோட்டைப்பட்டினம் பகுதியில் பரப்பரப்பை உண்டாக்கியுள்ளது.