மதுரை: கையால் மலம் அள்ளுவதை தவிர்த்திடும் வகையில் உள்ளாட்சிகளில் இயந்திரங்கள் வாங்க வேண்டுமென அரசு சார்பில் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த வக்கீல் சகாய பிலோமின் ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மனிதர்கள் கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் விதமாக தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இதற்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பில், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மதுரையில் 85 பேர், விருதுநகரில் 169 பேர் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அடையாள அட்டை வழங்கவில்லை. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. எனவே சட்டப்படி அடையாள அட்டை வழங்கவும், கண்காணிப்பு குழு அமைத்து நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சட்டப்படி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கையால் மலம் அள்ளுவதை தவிர்த்திட தேவையான இயந்திரங்களை வாங்கி பயன்படுத்துமாறு மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சுற்றறிக்கைப்படி இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவ.14க்கு தள்ளி வைத்தனர்.