டெல்லி முதல்வர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானால்… தூக்கில் தொங்குவதற்கு தயாராக இருக்கிறேன்! 2வது முறையாக டெல்லி ஆளுநருக்கு இடைத்தரகர் சுகேஷ் கடிதம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானால் நான் தூக்கில் தொங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று டெல்லி துணை நிலை ஆளுநருக்கு சிறையில் உள்ளள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாகக் கூறிய குற்றச்சாட்டில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு, பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பிரபலங்களுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையே, நாடாளுமன்ற மாநிலங்களை சீட் தருவதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிடம் ரூ.50 கோடி வாங்கியதாகவும், சிறையில் வசதிகள் கிடைக்க அக்கட்சியின் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் ரூ.10 கோடி பெற்றதாகவும் கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதி இருந்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார். எனினும், சுகேஷ் சந்திரசேகரின் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இந்நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு இரண்டாவதாக சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை தனது வழக்கறிஞர் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி உள்ளார். இன்று வெளியான அந்த கடித்தத்தில், ‘டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவரது சகாக்கள் குறித்து நான் கூறிய குற்றச்சாட்டுகள் ெபாய்யானதாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்; நான் அதற்கு தயாராக இருக்கிறேன். ஒருவேளை நான் கூறியது உண்மையாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள். நான் அமைதியாக தான் இருந்தேன்; ஆனால் அமைச்சர் ஜெயினின் தூண்டுதலின் பேரில் சிறை நிர்வாகத்தால் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளானேன்.

பஞ்சாப் மற்றும் கோவா சட்டமன்ற தேர்தல்களின் போது என்னிடம் பணம் கேட்டனர். நான் பொய் சொல்கிறேன் என்றால், சிறை நிர்வாகம் எதற்காக எனக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்க வேண்டும். ஏற்கனவே கொடுத்த புகாரை ஏன் வாபஸ் பெறச் சொல்கிறார்கள்? அதாவது முன்னாள் டிஜிபி சந்தீப் கோயல் மற்றும் சிறை நிர்வாகம் மீது கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறுமாறு அமைச்சர் ஜெயின் எதற்கான வற்புறுத்தினார்? நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் எதற்காக பயப்படுகிறீர்கள்?’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.