கூட்டமே குறையாத கோவில், எண்ண எண்ண குறையாத செல்வம் என எப்பொழுதும் திருவிழா போலக் காட்சி அளித்துக் கொண்டே இருக்கிறது திருப்பதி.
திரளான பக்தர்கள் குவியும் திருப்பதியில், மூட்டை மூட்டையாகக் காணிக்கைகள் குவியும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த வெள்ளையறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.
திருப்பதி தேவஸ்தானம் அறிக்கையின்படி, ரூ. 5,300 கோடிக்கு மேல் மதிப்புள்ள 10.3 டன் தங்கம் மற்றும் 15,938 கோடி ரூபாய் பணத்தையும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 2.26 லட்சம் கோடியாக இருக்கும் என்று தேவஸ்தான அலுவலர் ஏ.வி தர்மா ரெட்டி கூறியுள்ளார்.
2019 -ஆம் ஆண்டில் பல்வேறு வங்கிகளில் இருந்த டெபாசிட் தொகை 13,025 கோடி ரூபாய், இந்த தொகை தற்போது 15,938 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த முதலீடு 2,900 கோடி அதிகரித்துள்ளது.
2019-ம் ஆண்டில் 7,339.74 டன்னாக இருந்த தங்கத்தின் இருப்பு, தற்போது 2.9 டன் அதிகரித்து 10.3 டன்னாக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுதும் 7,123 ஏக்கர் பரப்பளவில், 960 சொத்துக்கள் தேவஸ்தானத்துக்குச் சொந்தமானதாக உள்ளது.