திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியில், பொதுமக்களால் ஊர் முகப்பில் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் முத்துராமலிங்கத் தேவர், உருவப்படம் மற்றும் புலித்தேவன் உருவப்படம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
அந்த பீடத்தில் முத்துராமலிங்க தேவரின் ஒரு அடி உயரம் உள்ள களிமண்ணலான சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்களால் அந்த சிலை உடைக்கப்பட்டதுடன் படங்களின் கண்ணாடிகளும் நேற்றிரவு (நவ. 7) உடைக்கப்பட்டுள்ளது.
இதை காலையில அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையிடம் அளிக்கப்பட்டது. நெல்லை கிழக்கு பகுதி காவல் துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தலைவர்கள் உருவ படங்களின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலரும் அங்கு திரண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கடந்து சென்றனர்.
பின்னர் அங்கிருந்த படங்கள் மற்றும் சிலைகள் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய படங்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உருவப்படம் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் இருந்து திருப்பணி கரிசல்குளம் செல்லும் பேருந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக, இதுபோன்ற பிரச்சனைக்களுக்கு சில காவலர்களை மட்டுமே பாதுகாப்புக்கு காவல் துறை அமர்த்தும் நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் பதற்றத்தை தவிர்க்க சுமார் நூற்றுக்கும் மேலான போலீசார் திருப்பணிக் கரிசல் குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற பகுதி என்பதால், அங்கு சிசிடிவி கேமரா வசதி குறைவு என கூறப்படுகிறது. மேலும், அரசு பேருந்தை தவிர்த்து வேறு பொதுப்போக்குவரத்து மிகக்குறைவு எனவும் கூறப்படுகிறது.