மத்திய பாஜக அரசு வலுவான கட்சியாக காலூன்றியுள்ளது. 2014, 2019 மக்களவை தேர்தல்கள் என இரண்டு முறையும் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதுடன், பல்வேறு மாநிலங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சூளுரைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை பாஜக இப்போதே தொடங்கி விட்டது. அதன் ஒருபகுதியாக, மத்திய அமைச்சர்கள் மாநிலம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து பாஜகவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர். குறிப்பாக, தென் மாநிலங்களில் இந்த முறை பாஜக கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வரக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆய்வு செய்தார். வடபழனியில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணித்த அமைச்சர், தன்னுடன் பயணித்த பொதுமக்களோடு கலந்துரையாடி மெட்ரோ ரயில் வசதி குறித்து கேட்டறிந்தார்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிஷன் ரெட்டி, தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வரக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்பதை தேர்தல் வெற்றிக்கு பிறகு தெரிவிக்கிறேன் என்றார்.
பரந்தூர் விமான நிலையம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “பரந்தூர் விமான நிலையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் துவங்கப்பட உள்ளது. எனவே நிலங்களை கையகப்படுத்துவது குறித்து மாநில அரசு முடிவு செய்யும். புதிய விமான நிலையம் தேவையா இல்லையா என்பதை நீங்களே கூறுங்கள்.” என்றார்.
தாஜ்மஹாலை விட மகாபலிபுரதிற்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்திருப்பதாக கிடைத்திருக்கக்கூடிய தகவல் குறித்து ஆய்வு செய்து மகாபலிபுரத்தின் மேம்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.