புதுடெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுஹான் கடந்த 2018ல் ஓய்வு பெற்றார். அப்போது இருந்தே இந்திய சட்ட ஆணையத்தின் குழு காலியாக உள்ளது. இந்நிலையில் கிட்டதட்ட 4 ஆண்டுகள் கழித்து, தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது.
ஆணைய குழுவின் உறுப்பினர்களாக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.சங்கரன், பேராசிரியர் ஆனந்த் பாலிவால், பேராசிரியர் டி.பி.வர்மா, பேராசிரியர் ராகா ஆர்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக தற்போது நியமிக்கப்பட்ட நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் ஓய்வு பெற்றார். இவர், கர்நாடகாவில் உள்ள அரசு கல்லூரிகளில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை இவரது தலைமையிலான அமர்வுதான் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.