கல்வி விகடன் யூடியூப் சேனலுக்காக EASY UPSC என்ற நிகழ்ச்சி மூலம் UPSC தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குகிறார் டாக்டர். வைஷ்ணவி சங்கர். இதன் ஒரு பகுதியாக UPSC தேர்வில் செய்தித்தாள் வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதை படிப்பது குறித்தான வழிமுறைகள் பற்றியும் பகிர்ந்துள்ளார்.
“UPSC தேர்வுக்கு செய்தித்தாள் வாசிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆங்கில ‘தி இந்து’ நாளிதழே இதற்கான என் பரிந்துரை. இதைத் தவிர்த்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ், Economic and Political Weekly, Press Information Bureau ஆகியவற்றில் வெளியாகும் முக்கியமான தேவையான செய்திகளைப் படிக்கலாம். UPSC தேர்வின் பாடங்கள் அன்றாட நிகழ்வுகளுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைச் செய்தித்தாள் வாசிப்பின் மூலமே அறிய முடியும். அன்றாட நிகழ்வுகள் மட்டுமின்றி ஆளுமைகளை (Personalities) பற்றிய செய்திகளையும் படிக்க வேண்டும். UPSC பாடத்திட்டத்துக்குச் சம்பந்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பதவிகளை யார் வகிக்கிறார்கள், அவர்களின் வேலை என்ன என்பதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். உலகளாவிய நிகழ்வுகளைப் பற்றி ஆளுமைகளின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ளவும் செய்தித்தாள் வாசிப்பு முக்கியம்.
முதல் பக்கத்தில் தொடங்கி கடைசி பக்கம் வரை பல்வேறு விதமான செய்திகள் ஒரு செய்தித்தாளில் உள்ளன. முதல் பக்கத்தில் அன்றைய நாளின் முக்கியமான நிகழ்வு செய்தியாக இருக்கும். அந்த செய்தியைப் படிப்பது மட்டுமின்றி வரும் நாள்களில் அதன் தொடர் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் வர வாய்ப்புள்ளதால் அதை நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்துள்ள இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பக்கங்களில் உள்ளூர், மாவட்ட மற்றும் மாநில செய்திகள் இருக்கும். இந்தப் பக்கங்களில் அரசுத் திட்டங்கள் பற்றியுள்ள செய்திகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அரசுத் திட்டங்களின் நோக்கம், பயன்கள் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி பகுப்பாய்வு (Analyse) செய்து படிக்கவேண்டும்.
நடுப்பக்கத்தில் உள்ள எடிட்டோரியல் (Editorial) பகுதியைப் படிப்பது மிக அவசியம். இதைத் தவிர்த்து நடுப் பக்கங்களில் உள்ள கட்டுரைகளையும், டேட்டா பாயிண்ட் (Data Point) பகுதியையும் படிப்பது நல்லது. இதைத் தொடர்ந்து வரும் பக்கங்களில் உள்ள தேசிய மற்றும் சர்வதேச செய்திகளில் சர்வதேச உறவுகள் (International Relations) பற்றிய செய்திகளை வாசிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வரும் பிசினெஸ் (Business) பக்கத்தில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி (RBI), SEBI, இந்தியாவின் ஏற்றுமதி & இறக்குமதி, நாணய மதிப்பு பற்றிய செய்திகளை வாசிக்க வேண்டும். கடைசியில் உள்ள விளையாட்டு செய்திகள் பக்கத்தில் விளையாட்டுத் துறையில் உள்ள ஆளுமைகள் மற்றும் அவர்களின் சாதனைகளைப் பற்றிய செய்திகளைப் படிக்கலாம்.
UPSC தேர்வில் நடப்பு நிகழ்வுகளைப் பற்றிய கேள்விகள் அதிகமாகக் கேட்கப்படுகிறது. அதனால் செய்தித்தாள் வாசிப்பு UPSC தேர்வில் வெற்றிபெற மிக அவசியமானதாகிறது” என்றார்.