Love Is Love: மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியை!

ராஜஸ்தான் மாநிலத்தில், மாணவியை திருமணம் செய்து கொள்ள ஆசிரியை ஒருவர், ஆணாக மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்தவர் மீரா. பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின் போது மாணவி கல்பனா என்பவரை ஆசிரியை மீரா சந்தித்துள்ளார். அப்போது அவர், கல்பனா மீது காதல் கொண்டார். பள்ளி காதல் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், மாணவி கல்பனாவை திருமணம் செய்து கொள்ள, ஆணாக மாற, ஆசிரியை மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார். மேலும் தனது பெயரை ஆரவ் குன்டால் என்றும் அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஆரவ் குன்டால் கூறுகையில், “காதலில் எல்லாம் நியாயமானது. அதனால் தான் நான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன். நான் பெண்ணாக பிறந்தேன். ஆனால் நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன். இதற்காக பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டேன். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது முதல் அறுவை சிகிச்சையை செய்தேன்” என்றார்.

இது தொடர்பாக கல்பனா கூறுகையில், “நான் அவரை தொடக்கத்தில் இருந்தே விரும்பினேன். அவர் இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன். அறுவை சிகிச்சைக்கு அவருடன் சென்றேன்,” என்றார்.

மாநில அளவில் கபடி விளையாடிய நிலையில், வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச கபடி போட்டிக்காக கல்பனா துபாய் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.