கையெழுத்து சரியில்லை என்று கூறி ஆசிரியர் அடித்ததில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பலமநேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹரீஷ் (14) என்ற மாணவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவரின் கையெழுத்து சரியாக இல்லை என்று கூறி, ஆங்கில ஆசிரியர் சிவா என்பவர் மாணவனை அடித்துள்ளார். இதில் காயமடைந்த மாணவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட துணை கல்வி அலுவலர் சந்திரசேகர், பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, ஆசிரியர் மாணவரை அடித்தது குறித்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், ஆசிரியர், மாணவரை அடித்தது உண்மை என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து, மாணவரின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், மாணவனை அடித்த ஆங்கில ஆசிரியர் சிவாவை பணி நீக்கம் செய்வதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. மேலும், ஆசிரியர் தாக்கியதில் படுகாயம் அடைந்த மாணவனின் மருத்துவச் செலவு அனைத்தையும் தாங்களே செலுத்துவதாக பள்ளி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு துணை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.