புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து எம்எச்ஏ வெளியிட்ட அறிவிக்கை:
தீவிரவாதிகளால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள், வருமானம் ஈட்டும் ஒரேயொரு நபரை இழந்த குடும்பங்கள், நிரந்தர ஊனமுற்றோர் மற்றும் தீவிரவாத தாக்குதலில் கடுமையான காயம் அடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2022-23 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மத்திய தொகுப்பிலிருந்து பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இந்த சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். இவ்வாறு உள்துறை அமைச்சகம் அறிவிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டு திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் அரசும் ஒப்புதலை வழங்கியுள்ளது.