ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும்

தரப்புக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் பகிரங்கமாக பேட்டியளித்தார்.

மேலும், ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றன. அரசு நிகழ்வுகள், பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திமுக முடிவு செய்தது. அதன்படி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ள கோரிக்கை மனுவில் கையொப்பமிடுமாறு திமுக மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எம்.பி.க்கள் பலரும் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சீர்க்கேட்டின் சிறந்த எடுத்துக்காட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என தெலங்கானா ஆளுநர் தமிழிசையும், ஆளுநர் தேவையில்லை என சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தனர்.

அதேபோல், முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து பிரச்னையை பற்றி பேசி தீர்க்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு, ஆளுநர் அனைத்து உதவிகளையும் செய்து அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்; ஆளுநரும், அரசும் இணைந்து செயல்படவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.