உலக பக்கவாத தினத்தை (அக்டோபர் 29) முன்னிட்டு, அவள் விகடன் மற்றும் சேலம் Manipal Hospitals இணைந்து `பக்கவாதம்… ஆரம்பத்திலேயே கண்டறிவோம்! நிரந்தர குறைபாடுகளைத் தவிர்ப்போம்’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தியது. மருத்துவமனையைச் சேர்ந்த மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்.ரகுநாதன் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:
பக்கவாதம் பரம்பரையாக வருவதற்கு வாய்ப்பு உள்ளதா?
பக்கவாதம் பரம்பரையாக வருவதற்கு 25% வாய்ப்பு உள்ளது. அதற்கான சரியான காரணங்களை இதுவரையிலான ஆராய்ச்சியில் கண்டறிய முடியவில்லை. பொதுவாக குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாதம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருக்கும். அதனால் பெற்றோருக்கு இதுபோன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் இருந்தால் அவர்களின் பிள்ளைகள் 35 வயதிலேயே இந்த நோய்களுக்கான பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளியில் செய்து கொள்வது நல்லது.
ஒருவேளை பிள்ளைகளுக்கும் அந்த நோய்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்து நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் பட்சத்தில் குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாதம் வந்திருந்தாலும் அவர்களை பாதிப்பதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறையும்.
புற்றுநோய் பாதித்தவர்களுக்கு பக்கவாதம் பாதிப்பதற்கு வாய்ப்புள்ளதா?
அனைத்து வகையான புற்றுநோய் பாதித்தவர்களுக்கு பக்கவாதம் வரும் என்று கூற முடியாது. பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதித்தவர்களில் சிலருக்கு ரத்தம் உறையும் தன்மை சாதாரண நபர்களைக் காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம். அதுபோன்ற நோயாளிகளுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புள்ளது. புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் சிலருக்கு ரத்தம் உறையும் தன்மை அதிகரித்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.
பக்கவாதம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
அனைத்து வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கும் சொல்வது போல் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒருநாளைக்கு குறைந்தது அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவில் அதிகம் உப்பு, இனிப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. புகை, மதுப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாதம், சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற பிரச்னைகள் இருந்தால், குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும். அப்படி மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யும்போது மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தீர்வு காண முடியும்.
பக்கவாதம் பாதித்ததற்கான முதல் அறிகுறி என்னவாக இருக்கும்?
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் எந்த இடத்தில் பாதித்துள்ளது என்பதைப் பொறுத்து அறிகுறிகள் தென்படும். முதலில் முகத்தில் ஒருபக்கம் செயலிழந்து போகும். பேச்சு தடைப்படும். வாய் ஒரு பக்கமாக கோணலாக இருக்கும். தண்ணீர் அருந்தினால் அது உள்ளே செல்லாமல் ஒரு பக்கமாக வழியத்தொடங்கும்.
பக்கவாதத்துக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளை FAST என்பார்கள்.
F – Face Deviation: முகம் ஒரு பக்கமாகக் கோணுதல். குறிப்பாக, வாய் நன்றாகக் கோணி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
A – Arm Weakness: கை ஒரு பக்கமாக வளைந்துவிடும். கையை உயர்த்தக்கூட முடியாது.
S – Speech Difficulty: வாய் குழறும், சிலசமயம் பேசவே முடியாது.
T – Time to treatment: இந்த மூன்று பிரச்னைகளும் இருப்பின் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
ட்ரைகிளிசரைடு எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டா?
கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்க வாய்ப்புள்ளது. இதற்கு உணவு முறையில் மட்டுமல்லமால் வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மருத்துவரை அணுகி தேவைபட்டால் மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும்.