ஜி20 அமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ளது.
இந்த நிலையில், வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி ஜி20 தலைமைக்கான இலச்சினை (லோகோ), கருப்பொருள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். தாமரை மலர் மீது பூமிப்பந்து இருப்பது போன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த லோகோவை வெளியிட்டு பிரதமர் மோடி பேசுகையில், “ஜி20 இலச்சினை என்பது வெறும் இலச்சினை அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், இது ஒரு செய்தி, இந்தியாவின் நரம்புகளில் ஓடும் உணர்வு.”என்றார்.
உலகளாவிய சகோதரத்துவத்தின் சிந்தனை ஜி20 இலச்சினை மூலம் பிரதிபலிப்பதாகவும், இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்.’ என்ற ஜி20 கருப்பொருளும் வெளியிடப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டின் தலைவராக நிதி அயோக்கின் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் கண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த டெல்லியில் நடைபெற்ற தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜி20 மாநாட்டின் தலைவர் அமிதாப் கண்ட், “10,000 அம்பானிகளும், 20,000 அதானிகளும் இருந்தால் மட்டுமே இந்தியா வளரும். எனவே உங்கள் துறையில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற ஜி20 வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.
ஜி 20 தலைவர் பதவியை வைத்திருப்பது வணிகங்களில் ஈடுபட ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்ற அவர், இது உங்களுக்கு இனி ஒருபோதும் கிடைக்காத வாய்ப்பு என்றும் கூறினார். “உலகளாவிய விநியோகச் சங்கிலியில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க இது ஒரு வாய்ப்பு. உலகத் தலைவர்களால் கொள்கைகள் அமைக்கப்படுகின்றன. நமது கட்டமைப்பு உலகத் தலைவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாடு ஒரு சிறந்த உற்பத்தி சக்தியாக மாற வேண்டுமானால் வணிகங்கள் விரிவடைந்து செழிக்க வேண்டும். நீங்கள் வளர்ச்சியடையாமல் இந்தியா வளர்ச்சி அடையாது.” என்று அமிதாப் கண்ட் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “30 முதல் 40 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ச்சியடைய வேண்டுமானால், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 9 முதல் 10 சதவீதமாக வளர்ச்சி விகிதம் இருக்க வேண்டும். இது நாட்டின் முன்பு இருக்கும் சவால். தனியார் துறை விரிவுபடுத்தாமல் இவை அனைத்தையும் சாத்தியப்படுத்துவது அரசால் மட்டும் முடியாது. ஜி20 என்பது அரசாங்கங்களை விட அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வளர்ச்சியடைந்து செழிக்காத வரை இந்தியா முன்னேறாது. சிறுகுறுநடுத்தர நிறுவனங்கள் பெரிய நிறுவனமாக வளராத வரை, பெரிய நிறுவனம் அதனை விட பெரியதாக வளார்ச்சியடையாத வரை இந்தியா வளர்ச்சியடையாது.” என்றார்.
ஜி20 என்பது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் சிறந்த கலவையாகும். ஜி20 தலைமையில் வளர்ந்து வரும் சந்தைகள் கணிசமான பங்கை வகிக்கும் என்றும் அவர் கூறினார். ஜி20இன் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ளது. டிசம்பர் மாதம் அது இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதன்பிறகு, இந்த தலைமையை இந்தியா பிரேசிலிடம் ஒப்படைக்கவுள்ளது.