ராஞ்சி: ஜார்க்கண்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஞ்சி, கோடா, பெர்மோ, டும்கா, ஜாம்ஷெட்பூர், சாய்பாசா, பாட்னா, குருகிராம், கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது ஜார்க்கண்டைச் சேர்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களான ஜெய் மங்கள் சிங், பிரதீப் யாதவ் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.100 கோடி பணப்பரிமாற்றம்: மேலும் ரூ.100 கோடிக்கு கணக்கில் வராத பணப் பரிமாற்றமும் தெரியவந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து, நிலக்கரி, ஒப்பந்ததாரர், இரும்புத் தாது தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
மேலும் ஜார்க்கண்டைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரூ.2 கோடி ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதற்கான டிஜிட்டல் சாட்சியங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். கணக்கில் வராத பணத்தின் மூலம் அசையாத சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.