திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த வேண்டும் என, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர். பக்தர்கள் மட்டுமல்லாமல், அர்ச்சகர்கள் உட்பட யாரும் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும், தடை உத்தரவை மீறி யாராவது செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது என்று நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிடட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.