சிட்னி,
சிட்னியில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் டி20 உலகக்கோப்பை முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இதில் இந்தியா, ஜிம்பாப்வேயிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி அதன் பிறகு நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேச அணிகளை சாய்த்து சரிவில் இருந்து மீண்டது. நெதர்லாந்து அணி தனது கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் பலன் பாகிஸ்தானுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது;-
“பாகிஸ்தானிடம் அற்புதமான பந்து வீச்சு தாக்குதல் உள்ளது. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி அவர்கள் உண்மையிலேயே சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். அது மட்டுமின்றி அவர்களிடம் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், மேட்ச் வின்னர்கள் உள்ளனர்.
இது தான் பாகிஸ்தானின் பலம். அதே போல் எங்களிடமும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். சூழலுக்கு ஏற்ப சீக்கிரம் மாற்றிக் கொள்வது முக்கியம்.”
இவ்வாறு கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.