ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “இந்திய அரசியலமைப்பு சட்டம் மாநிலத்தில் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாக தெரிவிக்கிறது.எனினும் பெயரளவில் மட்டுமே மாநிலத்தின் தலைவரான ஆளுநர் தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரை படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். ஏனென்றால் ஆளுநர் மாநிலத்தில் அரசியலமைப்பு கருவியின் ஓர் அச்சாணி ஆவார்.
ஆளுநராக இருப்பவர் அரசியலமைப்பின்பாலும் அது குறித்து நிற்கும் மதிப்புகளின்பாலும் முழு நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சோசலிச மதசார்பற்ற மக்களாட்சி குடியரசு என்பதாகும். அதில் கூறப்பட்டுள்ளவற்றுள் எதாவது ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஓர் ஆளுநர், அத்தகைய அரசியலமைப்பின் பேரிலான பொறுப்பை வகிக்க தகுதியற்றவர் ஆகிறார்.
தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாக பொதுவெளியில் முரண்படுவதும், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையின்றி காலம் தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருவதை பற்றிய எங்கள் அதிருப்தியை அவருக்கான உச்சபட்ச மரியாதையுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
தமிழக ஆளுநர் தமது முதன்மையான பணியை ஆற்றுவதில்லை. கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதா, நீட் விலக்கு சட்ட வரைவு உள்ளிட்ட மசோதாக்களுக்கு பதில் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்துகிறார்.
பல்வேறு மதங்கள்,மொழிகள் சாதிகளை சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் சொர்க்கமாக தமிழ்நாடு திகழ்கிறது தமிழ்நாடு ஆளுநர் ர வி கெடவாய்ப்பாக இந்நாட்டின் மதசார்பின்மை கருத்தியலில் தனது நம்பிக்கையின்மையை பொது வெளியில் தெரிவிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு அடிக்கடி சமுதாயத்தில் பிளவுபடுத்தும் பேச்சுகளில் ஈடுபடுகிறார்.
இத்தேசத்தின் மத சார்பின்மை பண்புகளில் மாறா பற்று கொண்ட எங்கள் அரசுக்கு இது பெரும் சங்கடமாக உள்ளது.தான் வகிக்கும் ஆளுநர் பொறுப்புக்கு சிறிதும் பொருத்தம் மற்ற வகையில் ஆளுநர் ஆபத்தான, பிளவுபடுத்தும் நோக்கிலான மத ரீதியான கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருகிறார். மக்கள் மனங்களில் வெறுப்பை துண்டி சமூக பதற்றத்தை உண்டு பண்ணும் நோக்கத்துடன் திட்டமிட்டு அவரது பேச்சுக்கள் அமைகின்றன. ஆளுநரின் சிந்தனையானது அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி சார்பு அரசியல் அல்லது தனது பதவிக்காலம் முடிந்த பின் பெறக்கூடிய எதிர்கால பதவிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி ஆட்சி செய்யாத மாநில அரசுகளை தாக்கும் வாய்ப்புக்காக ஒன்றிய அரசின் முகவர்களாக மட்டுமே மாநில தலைநகர்களில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதான ஆளுநர்களின் பிம்பம் நமது கூட்டுறவு கூட்டாட்சியியலை உருச்சிதைத்து மக்களாட்சியை அழித்துவிடும்.
எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாக ஆளுநர் மத வெறுப்பை தூண்டி மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். சட்டத்தினால் நிறுவப்பட்ட அரசின்பால் வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் தூண்டும் வகையில் அல்லது தூண்ட முயலும் வகையில் அவரது அறிக்கைகள் இருப்பதால் அவை தேசத்துரோகமானவை என்றும் சிலர் கருத கூடும்.
தனது நடத்தையாலும் செயல்களாலும் ஆளுநர் அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட ஆளுநர் பொறுப்பை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்து விட்டார் ஆகவே அப்பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM