சூலூர் : சூலூர் அருகே கம்ப்ரசர் டேங்க் வெடித்து மெக்கானிக் உடல் சிதறி பலியானார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூரை அடுத்துள்ளது முதலிபாளையம். இங்கு தனியாருக்கு சொந்தமான பஞ்சாலை இயங்கி வருகிறது. இயந்திரங்களை சுத்தம் செய்ய ராட்சத கம்ப்ரசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மெக்கானிக்காக கோவில்பட்டியை சேர்ந்த கோமதி சங்கர் (41) என்பவர் இருந்தார். இவருக்கு உதவியாக கருமத்தம்பட்டியை சேர்ந்த சந்தானகுமார் (44) என்பவர் வேலை பார்த்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராட்சத கம்ப்ரசர் பழுதானது.
இதனை சரிசெய்யும் பணியில் கோமதி சங்கர், சந்தானகுமார் ஆகியோர் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு பழுதை சரிசெய்த 2 பேரும் அதனை இயக்கி பார்க்க முயன்றனர். அதன்படி, ராட்சத டேங்கிற்கு காற்று செலுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் கம்ப்ரசர் டேங்க் வெடித்து சிதறியது. அப்போது, அருகில் இருந்த மெக்கானிக்குள் தூக்கி வீசப்பட்டனர். இதில், கோமதி சங்கர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். சந்தானகுமார் படுகாயங்களுடன் கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர்கள், காயம் அடைந்த சந்தானகுமார் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிடைத்த தகவலின்பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு வந்து பலியாகி கிடந்த மெக்கானின் கோமதி சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ராட்சத கம்ப்ரசர் டேங்க் வெடித்த சத்தம் வெடிகுண்டு வெடித்ததுபோல் கேட்டதால் அந்த பகுதி மக்கள் பரபரப்பும், பீதியுமடைந்தனர். இதில், ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.