20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து (7 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), குரூப்2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா (8 புள்ளி), பாகிஸ்தான் (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. குரூப்1ல் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகள் பெற்ற போதிலும் ரன்ரேட்டில் பின்தங்கியதால் வெளியேற நேரிட்டது.

இந்த நிலையில் சிட்னியில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானுடன் மோதுகிறது.

சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து அணிகளை போட்டுத்தாக்கிய நியூசிலாந்து, இங்கிலாந்திடம் மட்டும் தோற்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணிக்கு, அந்த கனவை அடைவதற்கான முதற்படி இன்றைய ஆட்டமாகும்.

அதே சமயம் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்தியா, ஜிம்பாப்வேயிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவி, அதன் பிறகு நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேச அணிகளை சாய்த்து சரிவில் இருந்து மீண்டது. நெதர்லாந்து அணி தனது கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் பலன் பாகிஸ்தானுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது.

கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த முத்தரப்பு 20 ஓவர் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. அந்த வெற்றி பாகிஸ்தானுக்கு அசாத்திய நம்பிக்கை கொடுக்கும். மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் நியூசிலாந்தும், 17-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், சோதி, லோக்கி பெர்குசன்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப் கான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.