திண்டுக்கல்: பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகத்திற்கு வருகை தருவதையொட்டி திண்டுக்கல் முழுவதும் 4,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவனத்தின் பவளவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரதமர் வருகையையொட்டி ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகம், காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று ஒன்றிய பாதுகாப்பு படையினர் மற்றும் ஒன்றிய அரசுத்துறை அதிகாரிகள் காந்தி கிராமம் வந்தனர். அவர்கள் பிரதமர் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் இறங்குதளம், கார் மூலமாக பல்கலைக்கழகம் செல்லும் வழித்தடமான மதுரை, திண்டுக்கல் நான்குவழிச்சாலை, பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.