லண்டன்: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2021-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் 6-ல் ஒருவர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இங்கிலாந்து மற்று வேல்ஸில் இந்தியர்கள் 1.5 சதவீத எண்ணிக்கையில் உள்ளன.
முன்னதாக, 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 75 லட்சம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு எண்ணிக்கையின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிப்பவர்களில் 1 கோடி பேர் வெளிநாடுகளைப் பூர்விகமாக கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில், இந்தியர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இந்தியர்கள் 9,20,000 என்ற எண்ணிக்கையிலும், போலாந்து நாட்டவர் 7,43,000 என்ற எண்ணிக்கையிலும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 6,24,000 என்ற எண்ணிக்கையிலும் வசிக்கின்றனர்.
அதிகரிக்கும் இனவெறி: வெளிநாட்டவர் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க, பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டவர் மீதான இனவெறித் தாக்குதல் அதிகரித்து வருவது கவலைக்குரிய செய்தியாகவே அறியப்படுகிறது. மேலும், அங்குள்ள சமூகங்களுக்கு இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. இனவெறி சார்ந்த கருத்துகள் பூர்வகுடி மக்களிடம் அதிகரித்து வருவதால் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்குக்கு அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது என்று நிபுணர்களும் வலியுறுத்துக்கின்றனர்.