அடிலெய்டு,
சூரியகுமார் யாதவுக்கு சிறிய மைதானங்களை விட, பெரிய மைதானங்களில் விளையாடுவதிலேயே விருப்பம் அதிகம் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
அடிலெய்டில் நாளை நடைபெறும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டிக்கு தயாராவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் நேற்று காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா பின்னர் தனது பயிற்சியை தொடங்கினார்.
இதுபற்றி ரோகித் சர்மா இன்று கூறும்போது, தற்போது ஓரளவு நன்றாக உள்ளது. லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. ஆனால், முழுவதும் சரியாகி உள்ளது என தனக்கு பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் பற்றி கூறினார்.
இதனை தொடர்ந்து அவர் இந்திய கிரிக்கெட் அணியின் வலது கை பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவை குறிப்பிட்டு பேசும்போது, பொறுப்பை ஏற்கும் தன்மையை சூரியகுமார் யாதவ் தன்னிடம் கொண்டிருக்கிறார். பலமுறை அந்த பக்குவம் அவரிடம் இருந்து வெளிப்பட்டு உள்ளது. அவருடன் பேட்டிங் செய்யும்போது மற்ற வீரர்களுக்கும் அது பற்றி கொள்ளும்.
சூரியகுமாருக்கு சிறிய மைதானங்களை விட, பெரிய மைதானங்களில் விளையாடுவதிலேயே விருப்பம் அதிகம். ஏனென்றால், சிறிய இடைவெளிகளை அவரால் பார்க்க முடியாது. அவருக்கு வானமே எல்லை என்று கூறியுள்ளார்.