மணல் திருட்டை பிடித்து கொடுத்த வருவாய்த்துறை! கூலாக ’நீ போ பா’ என அனுப்பி வைத்த காவல்துறை!

வருவாய்துறையினர் மணல் திருடிய நபரை கையோடு பிடித்துவந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், இது எங்கள் ஏரியாவுக்குள் வராது என்றும், வேண்டுமென்றால் மணல் திருட்டு நடந்த இடத்தை நேரில் பார்த்து கம்ப்ளைண்ட் எடுத்துக்கொள்கிறோம் என்று கூறி மணல் திருடிய நபரை போலீசார் அனுப்பிவைத்த சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே நடந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்திற்கு உட்பட்ட சர்வே எண் 560/A ல் கமலண்ட நாகநதி அமைந்துள்ளது. இந்த கமலண்ட நாக நதியிலிருந்து தினந்தோறும் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி மற்றும் லாரிகள் மூலம் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
image
குறிப்பாக திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் எல்லைப்பகுதியாக உள்ளதால், யார் வழக்கு போட்டு இந்த பிரச்னைக்கு முடிவுகட்டுவது என்று தெரியாமல் மணல் கடத்தல்காரர்களுக்கு காவல்துறை உடந்தையாக செயல்படுவதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு எடுத்துக்காட்டாகத்தான் நேற்று மாலை மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த தகவல் அடிப்படையில் தலைமையிடத்து வட்டாட்சியர் இளையராஜா, மாம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் ஜெகநாதன், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் ஆகியோர் ரோந்து பணியில் சென்றபோது கள்ளத்தனமாக மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
image
பறிமுதல் செய்த மாட்டுவண்டியை வருவாய்த்துறையினர் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு ஒட்டிவந்து வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் காவல் நிலையத்தில் புகாரை வாங்காமல் அது எங்களுக்கு உட்பட்ட பகுதி இல்லை என்றும், வேண்டுமென்றால் மணல் திருட்டு நடந்த இடத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு புகாரை வாங்கிக்கொள்கிறோம் என்றும் கூலாக பதிலளித்துள்ளனர்.
மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை அழைத்து, என்ன தம்பி நல்லா இருக்கியா? என உதவி ஆய்வாளர் ரமேஷ் கேட்டிருக்கிறார். பின்னர் பிடித்துவந்த மாட்டு வண்டியையும், மாட்டின் உரிமையாளரையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர் காவல்துறையினர்.
image
மணல் திருட்டு நடந்தால் அதனைத் தடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு எப்போதும் உண்டு என்பதை கண்டுகொள்ளாமல் விடும் பொழுதுதான் இயற்கை வளங்களை திருடர்கள் இன்னமும் திருடிக்கொண்டே இருக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.