சுஜான்பூர் (இமாச்சல பிரதேசம்): காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழலும் முறைகேடுகளும் வந்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. இங்கு ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, சுஜான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: இமாச்சலபிரதேசத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ். அக்கட்சியின் துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இமாச்சல பிரதேச மக்கள். அதேநேரத்தில், அடிப்படை வசதிகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இடைவிடாது மேற்கொண்டு வரும் கட்சி பாஜக.
காங்கிரஸ் கட்சியின் நிலை தற்போது மோசடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே சண்டைகள் நடைபெற்று வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ராஜஸ்தானிலும் வேறு பல இடங்களிலும் இத்தகைய சண்டைகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் எங்கெல்லாம் வலிமையாக இருந்ததோ அங்கெல்லாம் தற்போது அது துடைத்தெறியப்பட்டு வருகிறது. அக்கட்சி தற்போது நாட்டில் இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் ஆட்சி செய்து வருகிறது. அந்த மாநிலங்களில் இருந்து வளர்ச்சி சார்ந்த செய்திகள் ஏன் வருவதில்லை என்பதை நீங்களே அறிந்து கொள்ள முடியும்.
நிலையற்ற ஆட்சி, ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை வழங்கக் கூடியது காங்கிரஸ். அதற்கான உத்தரவாதத்தை நிச்சயம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நிலையான ஆட்சியை நிச்சயம் காங்கிரஸ் கட்சியால் தர முடியாது. அதற்கான விருப்பமும் அக்கட்சிக்கு கிடையாது. காங்கிரஸ் ஊழல் குறித்தே சிந்திக்கும். ஆனால், பாஜக நாட்டின் வளர்ச்சி குறித்தே சிந்திக்கும். இமாச்சல பிரதேசத்திற்குத் தேவை நிலையான, வலிமையான அரசு. அத்தகைய அரசால்தான் சவால்களை எதிர்கொண்டு மாநிலத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்று பிரதமர் மோடி பேசினார்.