உத்தரப்பிரதேசத்தில் திரைப்பட பாணியில் தன்னைப் போன்ற உருவமைப்பைக் கொண்ட ஒருவரைக் கொலைசெய்து, தான் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளிலிருந்தும் தப்பிக்க நினைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜை அடுத்த கரேஹா கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபிரோஸ் அகமது (45). பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் இருந்த ஃபிரோஸ் அகமது, ஒரு வழக்கிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில், அவர்மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களிலிருந்தும் தப்பிக்க திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி சௌரப் தீட்சித், “ஃபிரோஸ் அகமது பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கிறார். போலீஸார் அவரை அடிக்கடி சோதனைக்கான அழைத்திருக்கின்றனர். இதனால் வெறுப்படைந்த அவர், இந்த வழக்குகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என முடிவு செய்தார். அவர் நைனி மத்திய சிறையில் இருந்தபோது பிரபல குற்றங்கள், திரில்லர் தொலைக்காட்சி தொடர்கள் மூலம், குற்றங்களிலிருந்து எவ்வாறு வெளியே வருவது, தடயங்களைப் எப்படி அழிப்பது… உள்ளிட்டத் தகவல்களை திரட்டியிருக்கிறார்.
அதன் பிறகு தன் உருவமைப்பைக் கொண்ட ஒருவரைத் தேடத் தொடங்கியிருக்கிறார். மேலும், பீகாரின் பக்ஸரைச் சேர்ந்த சூரஜ் குப்தா என்ற இளைஞர் ஒருவருடன் ஃபிரோஸுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஃபிரோஸ் எலக்ட்ரீஷியன் தொழில் செய்தவர் என்பதால், சூரஜ் குப்தாவுக்கு வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கையளித்து அவரை வரவழைத்திருக்கிறார். அக்டோபர் 17 அன்று மர்தாபூர் கிராமத்துக்கு அருகிலுள்ள ஒரு உள்ளூர் உணவகத்துக்கு சூரஜ் குப்தாவை வரவழைத்து, ஃபிரோஸ் தன் உதவியாளர்களுடன் சேர்ந்து, சூரஜ் குப்தாவின் கழுத்தைக் நெரித்துக் கொன்றிருக்கிறார்.
அவரின் தலையைத் துண்டித்தவர்கள், இறந்தவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி, அடையாளம் தெரியாத வகையில் உடலை தீ வைத்து எரித்திருக்கிறார்கள். ஃபிரோஸ் தன் ஓட்டுநர் உரிமத்தையும் தீயிட்டு எரித்து, தான் இறந்துவிட்டது போல் காட்ட ஏற்பாடு செய்திருக்கிறார். சூரஜ் குப்தாவின் மரணத்தோடு தன் மீதான அனைத்து வழக்குகளையும் போலீஸார் முடித்துவிடுவார்கள் என்று நினைத்திருக்கிறார்.
ஆனால், இறந்தவரின் பாக்கெட்டிலிருந்து சில தொடர்பு எண்களை நாங்கள் கண்டுபிடித்தோம். அந்த எண்களை தொடர்பு கொண்டபோது, இறந்தவர் பீகாரைச் சேர்ந்த சூரஜ் குப்தா என்பது தெரியவந்தது. அதன்பிறகு ஃபிரோஸ், தான் செய்தக் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டார்” என்றார்.