தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவானது குடியரசுத் தலைவர் லுவலகத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது.
அந்த மனுவில் ஆளுநரின் அத்துமீறல்களை பட்டியலிட்டு அவரை கடுமையாக சாடியுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள், ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தமிழ்நாட்டில் மக்களாட்சிக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிடும் என்றும் குடியரசுத் தலைவர் திரெளரதி முர்முவை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
ஆளுநரின் அதிகார வரம்பு:
ஒரு மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாக இந்திய அரசியலமைப்புச்] சட்டம் தெரிவிக்கிறது. எனினும் பெயரளவில் மட்டுமே மாநிலத்தின் தலைவரான ஆளுநர். தமது அதிகாரத்தை மாநில முதல்வரை தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரையின்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். ஏனெனில் ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு கருவியின் ஓர் அச்சாணி ஆவார்.
ஆனால், தமிழகத்தின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி மற்றும் அவரது மாளிகையின் செயல்பாடுகள் தமிழ்நாடு அரசும், சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையிலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் பொதுவெளியில் முரண்படுவதுமாகவும், அவருக்கு
அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையின்றிக் காலந்தாழ்த்துவதுமாகவும் அமைந்துள்ளது.
அரசியலமைப்புக்கே அவமதிப்பு:
“உலகின் பிற நாடுகளைப் போலவே இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்தே உள்ளது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அபத்தமான, ஆபத்தான கருத்தை அண்மையில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்தியாவானது தனது அரசியலமைப்பையும், சட்டங்களையும் சார்ந்துள்ளதே தவிர, எந்த மதத்தையும் சார்ந்து இல்லை எனும்போது, ஆளுநரின் இந்த கருத்து இந்திய அரசியலமைப்பையே அவமதிப்பதாக உள்ளது. அத்துடன் சனாதனம், திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும், தமிழின் பெருமையையும் விமர்சிப்பது என, சுமுதாயத்தை பிளவுப்படுத்தும் நோக்கில் பேசி வருகிறார்.
ஒன்றிய அரசின் முகவர்:
ஒன்றிய அரசில் ஆளுங்கட்சியாக உள்ளவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கும் அல்லது இருந்த ஓய்வுப்பெற்ற அதிகாரிகளுக்கு கைமாறாக ஆளுநர் பதவி தரப்படுகிறது. இவர்களுக்கு ஆளுநர் பொறுப்பை வகிப்பதற்கான அடிப்படை அறிவோ, நேர்மையோ, நடுநிலைத்தன்மையோ இல்லை. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி, ஆட்சி செய்யாத மாநில அரசுகளைத் தாக்கும் வாய்ப்புக்காக துடிக்கும் ஒன்றிய அரசின் முகவர்களாக மட்டுமே இத்தகைய ஆளுநர்கள் திகழ்கின்றனர்.
மக்களாட்சிக்கு சாவு மணி:
இத்தகைய ஆளுநர்களின் பிம்பம், நமது கூட்டுறவுக் கூட்டாட்சியியலை உருச்சிதைத்து, மக்களாட்சியை அழித்துவிடும். இத்தகைய சீர்க்கெட்டின் சிறந்த எடுத்துக்காட்டாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளங்குகிறார். மக்களாட்சிக்கு சாவு மணி அடிக்கும் அலரது செயல்பாடுகளை காப்பாற்றும் விதத்தில், அரசியல் சட்டப்பிரிவு 156 (1) குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநர் பதவியில் இருந்த உடனடியாக நீக்கி, அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களை காப்பாற்ற வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வசம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.